அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான வழக்கு- தடை விதிக்க மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன், 2021ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி, தொகுதியில் உள்ள கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறி, திமுக கொடி கம்பங்களை நட்டு, தோரணங்கள் கட்டி பிரச்சாரம் செய்ததாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதேபோல, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து, 2021ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் விதிகளை மீறி, 15 வாகனங்களில் பிரச்சாரம் செய்ய வந்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் ராஜ கண்ணப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ராஜ கண்ணப்பன் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டார். மேலும், மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Night
Day