எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல இடங்களில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இரண்டு அரசு பேருந்தை சிறை பிடித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திம்மாபுரம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு பஞ்சாயத்து மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த ஆறு மாதமாக முறையாக குடிநீர் வழங்காதது குறித்து கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள், காலி குடங்களுடன் அவ்வழியே வந்த இரண்டு அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் புதூர் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் புதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வடமழைமணக்காடு கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமழைமணக்காடு கிராமத்தில் சரிவர கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வராததை கண்டித்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.
புதுச்சேரி தூத்திப்பட்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்திப்பட்டு கிராமத்தில் உள்ள இந்திரா நகர் மற்றும் மேட்டு தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனிடையே அப்பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து தர பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சேதராப்பட்டு சாலை சந்திப்பில் காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.