எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றாக செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியா முழுவதும் பரவி விரிந்து போக்குவரத்திற்கு பேருதவி செய்து வருகின்றன.
இதனை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக நாடு முழுவதும் 807 டோல்கேட்டுகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 71 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுங்க சாவடி வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை தவிர்ப்பதற்காக 2014 ஆம் ஆண்டு பாஸ்ட் டேக் பண வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், இதன் மூலம் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை சராசரியாக வெறும் 47 வினாடிகள் மட்டுமே குறைக்க முடிந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் பயண நேரத்தை குறைக்க கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாற்று வழிக்காக பல திட்டங்களை ஆராய்ந்து வந்தது.
அதன்படி 2024 ஆம் ஆண்டுக்குள் ஜி.பி.எஸ் தரவுகளின் அடிப்படையில் சுங்க கட்டணத்தை வசூல் செய்யும் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஜி.பி.எஸ் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்யும் முறை அறிமுகமாகும் பட்சத்தில், அதிநவீன ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் நெடுஞ்சாலைகளில் நிறுவப்படும்.
இந்த கேமராக்கள் வாகனங்களை அடையாளம் காணும் விதமாக, ஜி.பி.எஸ் கருவி உட்படுத்தப்பட்ட நவீன நம்பர் பிளேட்டுகளும் வாகனங்களுக்கு வழங்கப்படும்.
இதனைப் பயன்படுத்தி வாகனம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நெடுஞ்சாலையை பயன்படுத்தி பயணிக்கும் போது, எத்தனை கிலோமீட்டர் பயணித்துள்ளது என்பதை கணக்கிட்டு, அந்த வாகன என்னுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இருந்து சுங்க கட்டணம் தானியங்கி முறையில் எடுத்துக் கொள்ளும் என நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன ஜி.பி.எஸ் செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், சுங்க சாவடிகள் இல்லாத நெடுஞ்சாலைகள் மூலம் இந்திய மக்களின் பயணம் விரைவாகவும், எளிமையாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.