எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரத்தில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தில் பங்கேற்க பணம் கொடுத்து ஆட்களை ஏற்றி வந்த டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். அறியாமையை பயன்படுத்தி மக்களை, ஆடு மாடுகள் போல் அழைத்து செல்லும் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதில் கூட்டத்தைச் சேர்ப்பதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்தும் திமுக பிரமுகர்களால் ஒவ்வொரு ஆளுக்கும் 200 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு டாடா ஏஸ் வாகனத்தில் விழுப்புரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதன்படி, சின்னத்தச்சூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு பணம் கொடுத்து திமுகவினர், டாடா ஏஸ் வாகனத்தில் திணித்து அழைத்து வந்துள்ளனர். அப்படி அளவுகதிகமாக மக்களை ஏற்றி கொண்ட வந்த டாடா ஏஸ் வாகனம் தென்பேர் என்ற இடத்தில் வந்த போது நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சின்னத்தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான முதியவர் அருள் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த பெரியத்தச்சூர் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக இப்படி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணித்து அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.