எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்மையில் பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைத்த அவலம் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. பெற்றோர்களை கொதிப்படைய வைத்துள்ள இந்த சம்பவம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த செங்குட்டைபாளையத்தில் இயங்கி வருகிறது சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 5-ம் தேதி பூப்பெய்தியுள்ளார். இந்தநிலையில், முழு ஆண்டு தேர்வு நடப்பதால் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குத் தேர்வெழுதச் சென்றுள்ளார். ஆனால் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்த பள்ளி நிர்வாகம், 7 மற்றும் 9-ம் தேதி நடைபெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளை படியில் தனியாக அமர வைத்து எழுத வைத்துள்ளது.
இதனைக் கேள்விப்பட்ட மாணவியின் தாய் பதறித் துடித்து பள்ளிக்கு சென்றுள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் அவர் கேட்டபோது, இங்கு அப்படித்தான் நடக்கும், வேணுமின்னா உன் மகளை வேறு பள்ளியில் சேர்த்துக்கொள் என அலட்சிய பதில் கிடைத்தாக கூறப்படுகிறது.
இதனிடையே மாணவி தனியாக அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
பூப்பெய்தியதை காரணமாக காட்டி மாணவியை வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைத்த பள்ளி நிர்வாகம் மற்றும் அதனை கண்டு கொள்ளாத பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இயற்கையின் நியதியை மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோரின் இத்தகைய செயலை எந்த வகையில் ஏற்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.