ஆலயங்களில் நடைபெற்ற துரியோதனன் படுகளம், கொடியேற்று உற்சவம், சித்திரை திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற துரியோதனன் படுகளம், கொடியேற்று உற்சவம், சித்திரை திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் காந்தாரி வேடம் அணிந்து கொண்டு பொதுமக்களை துடைப்பம் மற்றும் முறத்தால் அடித்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியது. முன்னதாக ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த துரியோதனன் படுகள நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோவிலில் வட்டப்பாறை அம்மன் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் வட்டப்பாறை அம்மன் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வட்டப்பாறை அம்மன் சன்னதி வாசலில் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள் உள்ளிட்ட திரவியம் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மலையாள பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மலையாள பகவதி அம்மன் உற்சவர் சிலை எழுந்தருளிய தேரினை 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது தோளில் சுமந்து  பல்வேறு வீதிகளில் வலம் வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பக்தர்கள் பொங்கல் வைத்தும், அலகு குத்தி அக்னிசட்டி எடுத்தும் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதில் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் தர்மராஜர் கோயில் பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் பூசாரி தலையில் பிரம்மாண்ட பூ கரகம் எடுத்து நடனம் ஆடியவாறு அருளாசி வழங்கினார். அப்போது வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன் இளைஞர்கள் சார்பில் நடத்திய கத்தி போடும் நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இதில் 27 கிராம மக்கள் பங்கேற்று, 40-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளை கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவின் நிறைவை முன்னிட்டு சுவாமி வீதிவுலா நடைபெற்றது. ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீ சக்ரபாணிசுவாமி மற்றும் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் ஆகிய மூவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி புஷ்ப பல்லக்கில் எழுந்தருள, மல்லாரி இசையுடன் திருவீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஸ்ரீ கொக்கையர் பள்ளி காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவாக முக்கிய வீதிகளில் அம்மன் கரகத்துடன் முளைப்பாரியை தலையில் சுமந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலில் இறை வழிபாடு மற்றும் விசேஷ பூஜை நடத்தினர். பின்னர் முளைப்பாரியை கொட்டகுடி ஆற்றில் கரைத்தனர்.

Night
Day