எழுத்தின் அளவு: அ+ அ- அ
சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் உற்சவர் சன்னதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் முகப்பு பகுதியில் வண்ண கோலம் போடப்பட்டிருந்தது. அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் கோவில் வெளிப்பிரகார பகுதி வழியாக காவல்துறை சோதனைக்கு பிறகே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வைர கீரிடம், முத்து மாலை, தங்கப் பாவாடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுந்தரேஸ்வரர் வைர, வைடூரிய ஆபரணங்களுடன், வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டு அருள்பாலித்து வருகிறார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள அருள்மிகு பூத நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர், பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. முக்கனிகளான அலங்கரிக்கப்பட்ட விநாயகரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு கெட் வெல் ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி 10 ஆயிரத்து எட்டு பழங்களால் கனி அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட 10,008 பழங்கள் மூலமாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டு உலக மக்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியையும், தொழில் வளத்தை பெருகும் வகையில் அமையட்டும் என திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆதீனத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் வாழ்த்து தெரிவித்த மடாதிபதி, தமிழ் புத்தாண்டான விசுவாவசு வருடம், தொழில்வளம், பொருளாதாரம் வளம் பெருகும் ஆண்டாகவும், வீடுகளில் தொழில் வளம் செல்வம் பெருகும் ஆண்டாகவும் அமையட்டும் என்று ஆசியுரை வழங்கினார்.