சிறப்பு பூஜைகளுடன் திருக்குடைகள் ஊர்வலம் துவக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் கோலாகலமாக தொடங்கியது.

திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்வது வழக்கம். 

அந்தவகையில் 21-வது ஆண்டாக திருக்குடை ஊர்வலம், சென்னை பூக்கடை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று தொடங்கியது. உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

என்.எஸ்.சி. போஸ் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக செல்லும் திருக்குடை ஊர்வலத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷத்துடன் தரிசித்தனர். 

தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, வரும் 26-ம் தேதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மற்ற திருக்குடைகள், வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்கள் வரும் 27-ம் தேதி சனிக்கிழமை மாலை திருமலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Night
Day