தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா - தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தி சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருக்கார்த்திகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் தீபத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ஆறாம் படை வீடான மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கோயில் வளாகம் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து, கோயில் கோபுரம் முன் பனை ஓலைகளை வைத்து குடில் அமைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

இதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பெருமாள் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதேபோல், அருகில் உள்ள நரசிங்கம்பட்டி மலை கோயிலில் குளத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி மலைபோல் குவித்து வைத்து, அதில் விளக்கேற்றும் பாரம்பரிய திருவிழாவையும் மக்கள் விமர்சையாக கொண்டாடினர். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரைவென்றான் கிராமத்தில் உள்ள மலைக் கொழுந்தீஸ்வரர் கோயிலில் சுமார் ஆயிரம் அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மலைமீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பி வணங்கினர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத ஆலய உச்சியில் மகாதீபம் ஏற்ற்பட்டது. இதனை தொடர்ந்து கோயிலின் சன்னதி தெரு பகுதியில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ராஜாக்கள்மங்கலம் பெரும்வேம்புடையார் சாஸ்தா கோயில் மலை உச்சியில் 40 ஆண்டுகளுக்கு பின் மகாதீபம் ஏற்பட்டது.  

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் பகுதியில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2 ஆயிரத்து 700 அடி உயர மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், சின்ன திருவண்ணாமலை என அழைக்கப்படும் ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அச்சிறுப்பாக்கத்தில் உள்ள பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் தீபத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. 

திரு கார்த்திகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி அம்மன் வீதிஉலா நடைபெற்றது. கோயில் நந்தி சிலை முன்பு ஆயிரத்து 8 திருவிளக்குகள் ஏற்றிய பின், மகாமண்டபம் மற்றும் கோவில் வெளிப்புறங்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் பகுதியில் எழுந்தருளியுள்ள பால தண்டாயுதபாணி ஆலயத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர். 

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் கோபுரத்தின்மேல் மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோயில் முன் வைக்கப்பட்ட பனைஓலை சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி, மகாதீபம் ஏற்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதேபோல், காந்திவீதியில் உள்ள அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ஈஸ்வரர், முருகன், விநாயக சுவாமிகளின் உட்புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்பட்டது. 

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரச் சுவாமி  ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.



Night
Day