ஒருநாள் சிறைவாசத்துக்‍கு பிறகு இடைக்கால ஜாமீனில் வெளிவந்த நடிகர் அல்லு அர்ஜுன்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

புஷ்பா-2 திரைப்பட சிறப்பு காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன் ஒருநாள் சிறைவாசத்துக்‍கு பிறகு இடைக்‍கால ஜாமீனில் சிறையிலிருந்து இன்று வெளியே வந்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வந்ததால் அவரை காண திரண்ட ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், நடிகர் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரையும் கைது செய்த காவல்துறையினர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
பின்னர், நம்பள்ளி நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அல்லு அர்ஜுனை 14 நாட்கள் காவலில் வைக்‍க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, அல்லு அர்ஜுன் சார்பில் தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி ஜுவாடி ஸ்ரீதேவி, அல்லு அர்ஜுனுக்கு 4 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்கினார். இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறையில் இருந்து இன்று காலை இடைக்‍கால ஜா​மீனில் விடுவிக்‍கப்பட்ட அல்லு அர்ஜுனை அவரது தந்தை மற்றும் மாமனார் உள்ளிட்ட உறவினர்கள் வரவேற்றனர். 

தாம் சட்டத்துக்‍கு கட்டுப்பட்டு நடப்பவன் என்றும், வழக்‍கு விசாரணைக்‍கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் நடிகர் அல்லு அர்ஜுன், தெரிவித்துள்ளார். ஒரு நாள் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்துக்‍கு திரும்பினார். அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் நன்​றாக உள்ளதாக தெரிவித்தார். நெரிசலில் சிக்‍கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்‍கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். இது துரதிருஷ்டவசமான சம்பவம் என்றும், இதற்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். தனக்‍கு ஆதரவு அளித்தவர்கள், ரசிகர்கள் அனைவருக்‍கும் நன்றி தெரிவித்தார்.

varient
Night
Day