எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் மங்கல வாத்தியங்கள் மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் பிரவேசித்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனும் கோஷம் முழங்கிட நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் ஸ்ரீபக்தவத்சல பெருமாள் கோவிலில் வாணவேடிக்கையுடன் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை ஸ்ரீபக்தவச்சல பெருமாள் ஸ்ரீஅபிசேக வல்லி தாயாருடன் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சொர்க்க வாசல் ஸ்ரீபக்தவச்சல பெருமாள் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பெருமாளை வணங்கி வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் சர்வ அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது. விடியற்காலை நடை திறக்கப்பட்டு திருப்பாவை பாடல்கள் பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு சுவாமியை வழிபட்டனர்.
சேலம் மாவட்டம் சின்னப்பநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது. சொர்க்கவாசல் முன்பு பூரண கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து தீபாதாரணை காண்பிக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ தில்லை கோவிந்தராஜன் பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4.15 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பின்போது கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாள் திருக்கோலத்தில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் மலர் மாலை மற்றும் துளசி மாலை அலங்காரத்துடன் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி உடனுறை நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூத நாராயண பெருமாளை வழிபட்டனர்.