எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு, லட்சக்கணக்கான பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான இன்று, அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து ரத்தின அங்கி அணிந்து புறப்பட்ட நம்பெருமாள், அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வழியாக சென்றார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்து சென்றனர்.
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில், 60-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.