எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள், சித்திரை திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரியை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆறுரோடு பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் வண்ண சீருடை அணிந்து முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு தாரை தப்பட்டைகள் முழங்க ஆலயம் வந்தடைந்தனர். பெண்கள் கொண்டு வந்த முளைப்பாரியை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் வீதி உலா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்திலும், சுவாமி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
கரூர் தேர் வீதி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தமிழ் வருட பிறப்பையொட்டி ஸ்ரீ மாரியம்மன் மற்றும் மாவுடிராம சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக உற்சவர் மாரியம்மன், உற்சவர் மாவடி ராமசுவாமி சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட மாரியம்மன் மாவடி ராமசுவாமி திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தது. திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி நெடுகிலும் காத்திருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பால், தயிர், மஞ்சள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் கிழக்கு ராஜவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சர்க்கரை விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி ஆயிரத்து ஒரு கிலோ எடை கொண்ட காய் கனிகளை கொண்டு காதம்பரி அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ சர்க்கரை விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் வெள்ளாண்டிவலசு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் திருவிளக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காளியம்மனுக்கும், சுவாமிக்கும் புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று காளியம்மனை தரிசித்தனர்.
கோவை மாவட்டம் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன், ஸ்ரீ கருப்பராயன் முனீஸ்வரன் கோவில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேளதாளத்துடன் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக பரம்பரை அறங்காவலர் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.