மஹா சிவராத்திரி: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக இராஜ கோபுரத்தின் எதிர்புறத்தில் அமைந்துள்ள சர்க்கரை குளக்கரையில் திரளான பக்தர்கள் லட்சதீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். 

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மஹா சிவராத்திரி மற்றும் பிரதோஷ தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து நடராஜபெருமான் மற்றும் சிவகாமசுந்தரி தாயாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ருத்ராபிஷேக நிகழ்வு விமர்சிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 108 பெண்கள் கலந்து கொண்டு 108 ஸ்படிக லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஜார் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேலங்குடி கருப்பணசுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி மற்றும் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கவச அலங்காரத்தில் காட்சியளித்த கருப்பண்ண சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு கொத்து பரோட்டா பிரசாதமாக வழங்கப்பட்டது. 

மகா சிவராத்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி பள்ளத்தூர் அய்யனார் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. மாணவிகள், குழந்தைகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர் கலந்துகொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்தனர். 

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மூலவரான ராமலிங்கம் மற்றும் அனுமந்த லிங்கம் ஆகியவற்றை சேர்த்து ஒரே ஆலயத்தில் அமைந்துள்ள 108 சிவலிங்கங்களை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர். 

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தார் கோவிலில் கொடைவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருந்து அடர் வனப்பகுதி வழியாக சங்கிலி கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு உயிர் தொழும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

Night
Day