எழுத்தின் அளவு: அ+ அ- அ
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2வது நாளாக கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை அலுவல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற வக்ஃபு வாரிய திருத்த சட்டம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கக் கோரி ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அவாமி கட்சி ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்காக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.
இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இதுபற்றி விவாதிக்க கூடாது என அவர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏ வாகித் பாரா முழக்கமிட்டதால் அவரை அவையில் இருந்து காவலர்கள் குண்டு கட்டாக வெளியேற்றினர். இதனைக்கண்டித்து மற்ற எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் கூடி முழக்கமிட்டனர். எதிர்க்கட்சியினரின் கடும் அமளி காரணமாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை அலுவல் 2வது நாளாக அரை மணி நேரத்துக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டது.