டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே தலைநகரின் 4-வது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 48-ஐக் கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆனால் முதலமைச்சரைத் தேர்வு செய்வதில் காலதாமதமான நிலையில், இதற்கான கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று நடைபெற்றது. புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத், பாஜக தேசிய செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோர் மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்றக் கட்சித் தலைவராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பா்வேஷ் வா்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இதில் பர்வேஷ் வர்மா துணை முதலமைச்சராக இருப்பார் என பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் கூட்டணிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் திரை நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பதவியேற்வு விழாவில் கலந்து கொண்டனர்.

Night
Day