எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஞ்சாப் மாநில பாஜக தலைவரின் வீடு மற்றும் அமிர்தசரஸில் உள்ள கோவில் மீது மர்ம நபர்கள் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜலந்தர் நகரில் உள்ள மாநில பாஜக தலைவர் மனோ ரஞ்சன் வீட்டின் முன்பாக நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று அமிர்தசரஸில் உள்ள கோவில் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், கோவில் கதவு மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்விரு சம்பவமும், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியுமான ஜீஷன் அக்தரின் திட்டத்தின் பேரில் நடந்ததாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கையெறி குண்டு வீசிய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவம் குறித்து பேட்டியளித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மாநில அமைதியின்மையை சீல்குலைக்க பலர் முயற்சிப்பதாகவும், பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக சித்தரித்து காட்ட முயற்சிப்பதாகவும் கூறினார். மற்ற மாநிலங்களை காட்டிலும் பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்றாக உள்ளதாகவும் முதலமைச்சர் பகவந்த் மான் கூறினார்.