பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர், பிரபல ரவுடி 'பாம்' சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டவுடன் 'பாம்' சரவணன் சென்னையில் இருந்து தலைமறைவானார். அவர் மீது 6 கொலைவழக்குகள் உள்பட 33 வழக்குகள் உள்ளன. அதில் 3 கொலை வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாத பாம் சரவணனை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்டு விடுத்தது.

இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அதில் அவர், ஆந்திராவில் தஞ்சம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் வைத்து பிரபல ரவுடி பாம் சரவணனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

அப்போது பாம் சரவணன் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசி கத்தியால் எஸ் ஐ மணியை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது முல்லை நகர் சுடுகாடு அருகே போலீசார் அவரை இடது பக்க காலில் சுட்டு பிடித்தனர். காயமடைந்த ரவுடி பாம் சரவணன் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே,  தனது கணவர் பாம் சரவணன் நேற்று  முன்தினமே காவல்துறை கைது செய்ததாகவும், அழுத்தம் கொடுத்ததால் மட்டுமே போலீஸ் என்கவுண்டர் செய்யவில்லை என்றும் அவரது மனைவி பேட்டி அளித்துள்ளார்.

Night
Day