எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலகப்புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி வெகு உற்சாமாக நடைபெற்றது. இப்போட்டியில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்யங்களின் தொகுப்பை தற்போது காணலாம்...
தை பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் களம்கண்டன. 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அடக்கி வீரத்தை வெளிப்படுத்தினர். அதில் சில காளைகள், காளையர்களுடன் மல்லுக்கட்டியது பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியது.
களம் காண்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு காளை ஒன்று வர மறுத்தது - அப்போது காளை உரிமையாளர்கள் வலுக்கட்டாயமாக காளையை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றது கவனத்தை ஈர்த்தது.
கனிமொழி என்ற மாணவியின் காளை வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த போது துண்டை சுழற்றி உற்சாகப்படுத்தியதால், காளை மாடுபிடி வீர்களுக்கு சிக்காமல் வெற்றி பெற்றதை அனைவரும் கண்டு ரசித்தனர்.
வாடிவாசலில் இருந்து வெளியேறிய பேட்டை காளி என்ற பெயர் கொண்ட காளையை, தனி ஆளாக அடக்கிய அவனியாபுரம் விக்டர் என்ற மாடுபிடி வீரருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பிடிபட்ட நிலையிலும் களத்தை விட்டு வெளியேற மறுத்து களத்திலேயே சற்று நேரம் நின்று காளையர்களை மிரள செய்தது பேட்டை காளி காளை.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள் களத்தில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் மொத்தமாக வாடிவாசலுக்கே திரும்பி ஒன்றொடு ஒன்று சண்டையிட்டு கொண்ட காட்சிகளும் அரங்கேறியது. இதனை கண்டு சிதறி ஓடிய வீரர்கள் தேங்காய்நாரை தூவி காளைகளை விரட்டினர்.
நத்தம் வீராவின் காளை, மாடுபிடி வீரர்களை தூக்கி எறிந்து களத்தில் பந்தாடியது. யாருக்கும் சிக்காமல் துள்ளி குதித்த காளையை கண்ட வீரர்கள் தெறித்து ஓட்டம் பிடித்தனர்.
சிங்கப்பூர் முருகேசன் என்பவரது காளை வாடிவாசலில் இருந்து புல்லட் வேகத்தில் சிறிப்பாய்ந்தது. கருப்பு தங்கம் என செல்லமாக அழைக்கப்பட்ட காளை, மாடுபிடி வீரர்களுக்கு பிடிப்படாததால், தங்க காசு வழங்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு காளையை அவிழ்த்த சிறுவன், டைவ் அடித்து உற்சாகப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதேபோல் மற்றொரு சிறுவனும் உடலில் சந்தனம் பூசிக்கொண்டு, அரைகால் சட்டையுடன் துள்ளிகுதித்து பார்வையாளர்களையும், காளை மாடுகளையும் உற்சாகப்படுத்தியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
அவனியாபுரம் செல்லையா என்பவரது காளை சிறப்பாக களம்கண்டு மாடுபிடி வீரர்களை பறக்கவிட்டது. வீரர்களை நெருங்கவிடாது காளை, உரிமையாளர் கயிறை காட்டியதும் குழந்தை போல நின்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதேபோல், அவனியாபுரம் AK கதிரேசன் என்பவரது காளையும் வீரர்களை நெருங்கிவிடாமல் களமாடியது. அப்போது வர்ணனையாளர் சிங்கம், புலி இல்ல பயப்படாம தொட்டுபாரு என கூறியபோதும் வீரர்களை நெருங்கவிடாமல் மாடு வெற்றிபெற்று தங்க காசை தட்டி சென்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வேட்டியை மடித்து கட்டி களத்தில் ஆட்டம் போட்ட குண்டு தம்பி அனைவரையும் கவனத்தை ஈர்த்தார். அந்த தம்பியின் மாடு பிடிப்பட்டாலும் அவனுக்கு ஒரு அண்டா பரிசு வழங்குவதாக வர்ணணையாளர் அறிவித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி முத்தமிழ்செல்வி என்பவரது காளை களத்தில் வெற்றிபெற்ற நிலையில், களத்தில் துள்ளி குதித்து மாணவி உற்சாகப்படுத்தியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
மதுரை பெருங்குடியை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவியின் காளை வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட நிலையில் அதனை முத்துப்பட்டி திருநாவுக்கரசு என்ற மாடுபிடி வீரர் அடக்கினார். பின்னர் தான் பரிசாக பெற்ற தங்க நாணயம் மற்றும் பரிசு பொருட்களை காளை உரிமையாளரான ஆர்த்தியிடமே வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மாடுபிடி வீரரின் செயலுக்கு பொதுமக்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்த நிகழ்வும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில்தான் அரங்கேறியது.
சிக்கந்தர்சாவடி ரம்யா என்ற சிறுமியின் காளை வெற்றி பெற்றதால் துண்டை சுற்றியபடி வெற்றியை கொண்டாடிய சிறுமிக்கு தங்ககாசு பரிசளிக்கப்பட்டது.
இந்த பந்தயத்தில் காளைகள் முட்டியதில் பலருக்கு காயமும் ஏற்பட்டது. இதில், மாடுபிடி வீரரை தெறிக்கவிட்ட அழகர் காளை மாடு முட்டி தூக்கியதில், மாடுபிடி வீரா் காயம் அடைந்தார்.
இப்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்புக்கும் ஸ்வாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லாமல் இனிதே நிறைவடைந்தது.