எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 பதவிகளுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் அல்லது இடைக்கால தேர்தல்களை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலிப்பதவியிடங்கள் உட்பட 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலிப்பதவியடங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் 315 காலிப்பதவியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பதவியிடங்களுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைவாக முடிக்க தொடர்புள்ள அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.