கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் காலி நாற்காலிகளை பார்த்து அமைச்சர் மா.சு. வீராவேசமாக பேசியதை பார்த்து பொதுமக்கள் சிரிப்பில் ஆழ்ந்தனர்... ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றுவதுபோல் அமைச்சர் மா.சு. உரையாற்றிய கூட்டம் பற்றி சற்று விரிவாக காணலாம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுகவும் கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொள்வார் என பேனர்களும் வைக்கப்பட்டன.
இதை தொடர்ந்து சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
நல்ல கூட்டம் வரும் என நினைத்து அமைச்சர் மா.சு.வும் ஏராளமான ஹோம் வொர்க் செய்து உரைவீச்சுக்கு தயாராக வந்தார்... ஆனால் மேடைக்கு வந்து கூட்டம் எங்கே என பார்த்த அமைச்சர் மா.சு., மைதானத்தில் காலியாக இருக்கும் நாற்காலிகளை பார்த்து கலக்கம் அடைந்தார்.
வந்திருந்த சொற்ப உடன்பிறப்புகளும், அமைச்சர் மா.சு. பேசுவதற்கு முன்பே ஆட்டத்தை கலைத்து வாழைத்தாரை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் மனம் தளராத மரிக்கொழுந்துவாக பேச்சை தொடர்ந்தார் அமைச்சர் மா.சு... மேடையில் இருந்த நிர்வாகிகள் கீழே இறங்கி வந்து ஓட்டம் பிடித்த உடன்பிறப்புகளை தடுத்த போதும், கொடுத்த காசுக்கு அரை மணி நேரம் தான் டைம் எனக்கூறி, மான் கராத்தே பாணியில் ஜூட் விட்டனர்.
மொத்தத்தில் ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்துவது போல், கடமை உணர்ச்சியோடு, உரையாற்றிய அமைச்சர் மா.சு., மனம் கலங்கிய மரிக்கொழுந்து போல், மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனை வாட்டத்துடன் பார்த்துக்கொண்டே சென்னைக்கு நடையை கட்டினார்.