சர்வீஸ் சாலையில் சென்றாலும் கட்டணம் - போரூர் சுங்கச்சாவடியில் நூதனக் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. வாகன உரிமையாளர்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், சாலைப் பயன்பாட்டிற்றான கட்டணம் என கண்டிப்புக் காட்டுகிறது அரசு. ஆனால், சென்னை போரூரில் உள்ள சுங்கச்சாவடி ஒருபடி மேலே போய், சர்வீஸ் சாலையைப் பயன்படுத்துபவரிடமும் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த நூதனக் கொள்ளை குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். சொந்தமாக வேன் வைத்துள்ள இவர் கடந்த மாதம் 2 ஆம் தேதி போரூரில் இருந்து மதுரவாயலுக்கு போரூர் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது சுங்கச்சாவடியில் இருந்து 55 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக சீனிவாசனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எதற்காக சர்வீஸ் சாலையில் சென்றதற்கு பணம் எடுத்தார்கள் எனக் குழம்பியுள்ளார்.

பின்னர் 4 ஆம் தேதி திண்டிவனத்திற்கு சுங்கச்சாவடி வழியாக சென்றபோது 55 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார். ஆனால் திரும்பி வந்தபோது 25 ரூபாய் எடுக்காமல், மீண்டும் 55 ரூபாய் எடுத்துள்ளனர். பொறுக்க முடியாத சீனிவாசன் இது குறித்து கேட்டதையடுத்து கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பி உள்ளனர் சுங்கச்சாவடி அலுவலர்கள். 

இந்நிலையில் இந்த மாதம் 5 மற்றும் 10-ம் தேதி சர்வீஸ் சாலையில் சென்றபோது இரு முறையும் 55 ரூபாய் எடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சீனிவாசன் நேரில் சந்தித்து மீண்டும் கேட்டபோது, 24 மணி நேரத்தில் பணம் மீண்டும் வந்து விடும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை பணம் வராததால் வழக்கு தொடர போவதாக சீனிவாசன் கூறியுள்ளார்.

ஒரு முறை என்றால் பரவாயில்லை... 3 முறை சர்வீஸ் சாலை பயணத்திற்கு பணம் எடுத்துள்ளனர். சர்வீஸ் ரோடு அருகே ஸ்கேனர் இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் மெதுவாகச் செல்லும் போதும் இது போன்ற தவறு நடைபெறுவதாக விநோத விளக்கம் அளிக்கின்றனர் சுங்கச்சாவடி அலுவலர்கள். புகார் அளித்தால் பணம் திரும்ப வழங்கப்பட்டு விடும் எனத் தெரிவிக்கின்றனர். 

அப்போது, புகார் தெரிவிக்காத வாகனங்களில் இருந்து பெறப்படும் பணம் எங்கே செல்கிறது? இதுபோன்ற தவறை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது ஏன்? சுங்க கட்டணத்துடன் சுங்கக் கொள்ளையும் நடத்தி வாகன உரிமையாளார்களை வதைப்பது ஏன்?... உரிய நடவடிக்கை எடுத்து இக்கேள்விகளுக்கு பதில் அளிக்குமா போரூர் சுங்கச்சாவடி? பொறுத்திருந்து பார்க்கலாம்...!

Night
Day