நீலகிரியில் கனமழை : வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் பந்தலூர் பகுதி தீவு போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்தது. அதிலும் குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது 

3 மணி நேரத்தில் பந்தலூர் பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகள் மழைநீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது.

கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. தேவாலா-உப்பட்டி சாலையில் காரின் மீது மண் சரிந்து விழுந்த நிலையில் காரில் பயணித்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பந்தலூர் பகுதியில் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில், வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி உயிர் தப்பினர்.

இதேபோல் பாடந்துறை பகுதியில் சாலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மழைநீரில் தத்தளித்தப்படி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றனர். இதேபோல் ஆவின் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பால் கேன்களை கையில் ஏந்தியவாறு வெள்ள நீரில் எடுத்துச் சென்றனர்.

தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. கூடலூரில் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக தேவாலா-கரியசோலை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பில்லுக்கடை அருகில் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் புளியம்பாறை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் கயிற்றை கட்டி பொதுமக்கள் வெள்ளத்தை கடந்து சென்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு எந்த ஒரு அரசு அதிகாரிகளும் இதுவரை வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Night
Day