"அந்த மனசு தான் சார் கடவுள்... "ரத்தன் டாடா எழுதிய உயில்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உயிர்போகும் முன்பு தனது சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும்? எப்படி செலவிடப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே உயில் எழுதிவிட்டு மறைந்துள்ளார். ரத்தன் டாடா எழுதி வைத்த உயில் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவரது சொத்தில் யார் யாருக்கு பங்கு? என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள மிக முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்று டாடா குழுமம். வீட்டில் உபயோகிக்கப்படும் உப்பு முதல் சொகுசு கார் வரை அனைத்தையும் டாடா நிறுவனம் தயாரிக்கிறது. டாடா குழுமத்தை இந்தளவுக்கு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக மாற்றியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது. இவரது காலத்தில் தான் டாடா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. இதனிடையே, கடந்த 9ம் தேதி ரத்தன் டாடா திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு ஒட்டுமொத்த நாடுமே கலங்கி நின்றது யாராலும் மறக்க முடியாத ஒன்று. இந்நிலையில், தான் ரத்தன் டாடாவின் உயில் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ரத்தன் டாடாவுக்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. இந்நிலையில், சகோதரர் ஜிம்மி டாடா, தனது தாயின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகியோருக்கும் சொத்துகள் கிடைக்கும்படி ரத்தன் டாடா உயில் எழுதியுள்ளார். 

இதனை தவிர, நம்பகமான சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டிட்டோவை பராமரிக்க ஒப்படைத்துள்ளார். அதன்படி, ராஜன் ஷா, டிட்டோ வளர்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தனது சொத்து மதிப்பில் இருந்து செலவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ரத்தன் டாடா தனது நீண்டகால பணியாளரான சுப்பையாவுக்கும் தனது உயிலில் சில ஏற்பாடுகளை செய்துள்ளது பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

இப்படி பலருக்கும் பலவற்றை எழுதி வைத்த ரத்தன் டாடா தனது இளம் நண்பராகவும், நீண்ட காலம் அவருடன் பயணிக்கும் முக்கியமான நபராகவும் இருக்கும் சாந்தனு நாயுடுவை எப்படி மறப்பார். அவருடைய 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தில் சில முக்கியமான விஷயத்தை சாந்தனு நாயுடுவுக்காக கொடுத்துள்ளார். சாந்தனு நாயுடு தொடங்கிய முதியோர்களுக்கான நல சேவை நிறுவனமான குட்ஃபெல்லோஸில் தனது முதலீட்டின் மூலம் பெற்ற பங்கை ரத்தன் டாடா திரும்பவும் அந்நிறுவனத்திற்கே கொடுத்துள்ளார்.

மேலும், சாந்தனு நாயுடுவின் வெளிநாட்டு கல்வி செலவுகளாக டாடா குழுமத்தில் பெற்ற கடனை தனது சொத்து மதிப்பில் இருந்து கழிக்கவும், முழு செலவுகளையும் தானே ஏற்றிருக்கிறார் ரத்தன் டாடா. சாந்தனு நாயுடு மற்றும் ரத்தன் டாடாவையும் இணைத்து இருவருக்குமான விலங்குகள் மீதான அன்பு தான். மும்பை சாலையில் பல தெரு நாய்கள் இரவில் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதை தடுக்க சாந்தனு நாயுடு, இரவில் வெளிச்சம் பட்டால் மின்னும் நாய் காலரை உருவாக்கினார். இதனை அறிந்த ரத்தன் டாடா, டாக் காலர் முயற்சி பாராட்ட சாந்தனு நாயுடுவை அழைத்தபோது தான் இருவரும் விலங்குகள் மீதான அன்பு குறித்து பரிமாறிக்கொண்டு அவர்களது நட்புக்கு ஆரம்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடாவின் தாராள குணம் அவரது உயிலிலேயே தெரிகிறது என பலரும் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்

Night
Day