எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருச்சி மாநகரில் கிப்ட் ஷாப்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள கிரீட்டிங் கார்டுகள் மற்றும் காதலர் தின பரிசுப்பொருட்களை வாங்க இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். களைகட்டியுள்ள காதலர் தின விற்பனை குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
காதல் வயப்படாத மனிதர்கள் இவ்வுலகில் இருக்க வாய்ப்பில்லை. கண்களால் காதல் செய்து கடிதம் கொடுத்த காலம் மாறி, யார் என்று தெரியாமலேயே தொலைதூர காதலுக்கு வழிவகுத்துள்ளது டிஜிட்டல் காலம். ரோமாபுரியில் கிபி.270ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, வேலண்டைன் என்பவர் தனது காதலி அஸ்டோரியசுக்கு வாழ்த்து அட்டை மூலம் காதலை வெளிப்படுத்தினார். இதனால் அவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நாளையே, வாலண்டைன் தினமாக அதாவது காதலர் தினமாக உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடுகிறோம்.
பெரும்பாலான நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும், இந்த நாளை தங்களது கலாச்சாரங்களுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்து கொண்டாடி வருகின்றனர் காதலர்கள். உலகின் சில பகுதிகளில், காதலர்கள், தம்பதியினரைக் காட்டிலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் தங்களது காதலின் அடையாளத்தையும், ஆழத்தையும் வெளிப்படுத்தும் வகையில், கிரீட்டிங் கார்டுகள் மற்றும் பலவித வண்ண விலையுயர்ந்த பரிசுப்பொருட்களையும் காதலிக்கும், காதலனுக்கும் வழங்கி மகிழ்வார்கள்....
அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் உள்ள கிப்ட் ஷாப்களில் குவிக்கப்பட்டுள்ள கிரீட்டிங் கார்டுகள் மற்றும் காதலர் தின பரிசுப்பொருட்களை ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது நண்பர்களுக்கும், காதலர்களுக்கும் வழங்க ஆர்வமுடன் தேர்வு செய்து வருகின்றனர். அது மட்டுமன்றி பூக்கள், பூச்செடிகளையும் பரிசளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்....
காதலர் தினத்தில் இனிப்பாக அன்பை பரிமாறும் வகையில் இனிப்புகளால் செய்யப்பட்ட பூங்கொத்துக்கள், இதய வடிவிலான இனிப்புகள் உள்ளிட்ட பலவகையான கிப்ட் பொருட்கள் கிப்ட் சென்டரில் அலங்காரப்படுத்தப்பட்டு உள்ளது....
அதே நேரம், 90ஸ் கிட்ஸை விட 2கே கிட்ஸே அதிக அளவு காதலர் தினத்தை கொண்டாட புதிய வகையான கிப்ட் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், அவர்களுக்கு ஏற்ற வகையிலான புதிய வகை கிப்ட் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் கிப்ட் ஷாப் விற்பனையாளர்கள்..
தானும், கணவரும் பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் செய்து கொண்டாலும், தங்களுக்குள் காதல் கோட்டையை கட்டி வாழ்ந்து வருவதாகவும், இதனாலேயே காதலர் தினத்தை கொண்டாடி வருவதாகவும் தெரிவிக்கிறார் இஹாரா..
காதலர் தினம் என்றாலே அன்பை வெளிப்படுத்தும் ஒரு கொண்டாட்டம்தான். ஆகையால் நாளைய தினம் ரோஜாக்கள், சாக்லேட்டுகள், பரிசு பொருட்கள் என தங்களுக்கு ஏற்ற வகையில் காதலை பரிமாறிக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர் காதலர்கள்....
ஜெயா பிளஸ் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் சுஜெய் பிரகாஷ் உடன் திருச்சியில் இருந்து செய்தியாளர் இளவரசன்.