அம்மா உணவக ஊழியர்கள் மீது பொய் புகார்...வேலையை விட்டு நீக்க திமுகவினர் சதி..

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை ராமாபுரத்தில் 13 ஆண்டுகளாக செயல்படும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையை விட்டு விரட்ட திமுகவினர் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்மா உணவக ஊழியர்கள் மீது பொய் புகார் அளித்து தொந்தரவு கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏழை, எளிய மக்கள் பசியாறும் வகையில், 2013-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மாவால், அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு உட்கொண்டு வந்தனர். இத்திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்ததால், தமிழகம் ழுழுவதும் படிப்படியாக அம்மா உணவகங்கள் விரிவுபடுத்தப்பட்டன. 

இந்தநிலையில் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருந்த அம்மா உணவகங்கள் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சீரழிந்து வருகிறது. அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட எந்த பொருட்களும் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற புகார் தொடர்கிறது.

அந்த வகையில் ராமாபுரம் பஜனை கோயில் தெருவில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் கடந்த 18 மாதங்களாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்த அம்மா உணவக ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு வாங்க கூடிய ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை அம்மா உணவகத்திற்கு கொண்டு வந்து சமைத்து தங்கு தடையின்றி உணவு வழங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களை வேலையை விட்டு விரட்ட வேண்டும் என்பதற்காக பஜனை கோயில் தெருவில் உள்ள அம்மா உணவக ஊழியர்கள், உணவுப் பொருட்களை திருடி சென்று விடுவதாக அப்பகுதி திமுகவினர் தொடர்ந்து பொய் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயா என்ற அம்மா உணவக ஊழியரின் மகனான சதீஷ் என்பவர் மீது அம்மா உணவகத்தில் உள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்து அனுப்பியதாக ராமாபுரம் காவல் நிலையத்தில் திமுகவினர் பொய் புகார் கொடுத்துள்ளனர். இதனை உரிய முறையில் விசாரிக்காமல் காவல்துறையினர் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுபோல அப்பாவி அம்மா உணவக ஊழியர்கள் மீது தொடர்ந்து 155 வது வார்டு கவுன்சிலர் மற்றும் திமுகவினர் புகார் கொடுப்பதும், அவர்களை வேலையை விட்டு வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுப்பதும் வாடிக்கையாக நடப்பதாக கூறப்படுகிறது.

இதுபோல பொய் புகார்களை கூறி 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தங்களை வேலையை விட்டு விரட்ட திமுகவினர் தொடர்ந்து தொந்தரவு அளித்து வருவதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே அம்மா உணவகத்தில் அரசியல் செய்யாமல் முறையாக பராமரித்து ஏழை-எளிய மக்களுக்கு உணவளிக்க வழிவகை செய்ய வேண்டும் என விளம்பர திமுக அரசுக்கு சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day