டிஜிட்டல் மிரட்டல் - உஷார் வழக்கறிஞர், சைபர் க்ரைமில் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காவல்துறை என வீடியோ காலில் தோன்றி, சென்னை வழக்கறிஞரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் பிரிவில் வழக்கறிஞர் விவேக் புகார் அளித்துள்ளார்.

மருத்துவர்கள், நீதிபதிகள், ஐடி துறையை சேர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தால் எவ்வளவு முன்னேறுகிறோமோ அவ்வளவு தீமையும் சைபர் கிரைம் மூலம் உருவாவதாக கருதப்படுகிறது. சமூக ஊடகங்களில் பதிவிடும் பதிவுகளே இந்த குற்றங்களுக்கு வழிவகுப்பதுடன்,  சைபர் கிரைம் பிரிவிற்கு புகார் மனுக்கள் வருவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது என்றே கூறலாம். டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற சைபர் க்ரைம் புகாருக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சைபர் கிரைம் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காவல்துறை என வீடியோ காலில் தோன்றி சென்னை வழக்கறிஞரை ஏமாற்ற முயன்ற மோசடி கும்பல் குறித்து காவல்நிலையத்தில் புகார் ஒன்று பதியப்பட்டுள்ளது.

சென்னை, கொரட்டூர், கேசவன் நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் விவேக். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரது வாட்ஸ்அப்பிற்கு வந்த அழைப்பில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி பேசுவதாகவும், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, தொலைபேசி எண்ணில் மும்பையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர் அங்த கும்பலை சேர்ந்தவர்கள்.

"இதுகுறித்து உங்களை விசாரிக்க வேண்டும்'' என கூறி வீடியோ காலில் போலீஸ் போன்று உடை அணிந்த நபர் ஒருவர் ஆங்கிலத்தில் பேசி, வங்கி எண் போன்றவற்றை கேட்டு, டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி உள்ளார். இதனை வழக்கறிஞர் விவேக் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் பிரிவில் வழக்கறிஞர் விவேக் புகார் அளித்துள்ளார். அதில் தன்னை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி மும்பையில் இருந்து வீடியோ கால் செய்த போலி போலீஸ் கும்பல் மிரட்டுவதாகவும், போலியான FIR என்னை காண்பித்து வீடியோ காலில் உண்மையான ஆதாரங்களை கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் விவேக் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையராக சைபர் குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே புகார் அளிக்க வந்த நேரத்திலும் அந்த மர்ம கும்பல், வழக்கறிஞர் விவேக்கின் செல்போனுக்கு வீடியோ கால் செய்துள்ளது. அப்போது விவேக் தான் காவல் ஆணையரக அலுவலகத்தில் இருப்பதை காட்டிக்கொள்ளாமல், போலீசார் கண்முன்பே அந்த வீடியோ காலில் வந்தவரிடம் பேச்சு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் ஒருவருக்கு, போலீஸ் உடை அணிந்த மோசடி கும்பல் டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி மோசடியில் ஈடுபட முயன்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day