எழுத்தின் அளவு: அ+ அ- அ
டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் விவகாரத்தில் தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதையாக விளம்பர திமுக அரசு செயல்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. மக்களுக்கு நல்லது செய்வது போல நாடகம் ஆடிவரும் திமுக அரசின் நயவஞ்சக செயல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு ...
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்க உரிமை வழங்கப்பட்டதை ரத்து செய்யவும் மாநில அரசு அனுமதியில்லாமல் சுரங்க ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் சட்டசபையில் அவசரம் அவசரமாக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு உரிமம் வழங்கிய போதெல்லாம் கைகட்டி மவுனியாக இருந்த விளம்பர திமுக அரசு பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து வேறுவழியின்றி தீர்மானத்தை நிறைவேற்றி, சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
முதலில் டங்ஸ்டன் என்றால் என்பதை பார்த்து விடுவோம். டங்ஸ்டன் என்பது இயற்கையான உலோகம். ரசாயன கலவையாக பாறைகளில் படிந்து காணப்படுகிறது இந்த டங்ஸ்டன். மேலும் "ஸ்கீலைட்" scheelite மற்றும் Wolframite ஆகியவற்றின் தாதுக்களில் இருந்தும் டங்ஸ்டன் பிரித்தெடுக்கப்படுகிறது. 1,900ம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கபட்ட இந்த டங்ஸ்டன் முதலில் குண்டு பல்புகளிலும் பிறகு அதிக ஒளியை தரும் halogen பல்புகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு துறை மற்றும் போலி தங்கக்கட்டிகள், ராணுவத்தில் குண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக மின்சார வாகனங்களுக்கு தேவைப்படும் பேட்டரிகளில் உபயோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கிராமங்களில் டங்ஸ்டன் கனிமங்களை வெட்டி எடுக்க வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டிற்கு, கடந்த நவம்பர் 7ம் தேதி மத்திய சுரங்க அமைச்சக துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாயக்கர்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்து 15 ஹெக்டேர் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அரிட்டாபட்டி கிராம மக்கள், சுரங்கம் வந்தால் விவசாய நிலங்கள், பூர்வீக வீடுகள், இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் என்பதால் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, சட்டப்பேரவையில் தமிழக அரசின் சார்பில் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு சுரங்க அனுமதி வழங்க கூடாது என்றும் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் கூறி திங்கள் கிழமை தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
இது தொடர்பான விவாதத்தின் போதுதான் திமுகவின் நாடகம் அம்பலமானது. விளம்பர திமுக அரசு உணமையாகவே மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், ஆரம்ப கட்டத்திலேயே மத்திய அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் வேண்டுமென்றே உறங்கிவிட்டு திமுக அரசு கபட நாடகம் ஆடுவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, 2023-லிலேயே இந்த திட்டத்தை எதிர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். அப்படி எதிர்த்திருந்தால், கடந்த வாரம் பிரதமருக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் முதலமைச்சர் அதை குறிப்பிட்டிருந்திருப்பார். ஆனால் அப்படி ஏதும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆரம்பத்தில் கண்டும் காணமல் அலட்சியமாக இருந்து விட்டு, மக்கள் வீதிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை எதிர்ப்பது போல் விளம்பர திமுக அரசு நாடகம் ஆடுவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள் என்ற எதிர்க் கட்சிகளின் கேள்விக்ளுக்கு முதலமைச்சரிடமோ, சம்பந்தப்பட்ட அமைச்சரிடமோ எந்த பதிலும் இல்லை. டங்ஸ்டன் சுரங்கம் வர விட மாட்டோம், நான் முதலமைச்சராக இருக்கும் வரை சுரங்கம் வர விட மாட்டேன் என்று இப்போது ஆவேசமாக பேசும் முதலமைச்சர், ஆரம்பத்திலேயே இதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது வீரவசனம் பேசி சட்டப்பேரவையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
பொய் வாக்குறுதிகளையும் பொய் பிரச்சாரங்களையும் செய்வது திமுக-விற்குப் புதிதல்ல. அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என பெண்களை ஏமாற்றிய திமுகதான் இன்று டங்ஸ்டன் வந்தால் முதலமைச்சர் பதவில் இருக்க மாட்டேன் என வாக்குறுதி கொடுக்கிறது. இந்த வாக்குறுதி எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்.