வாடகை பேருந்துகளால் ரூ.50 கோடி இழப்பு... அழிவுபாதையில் போக்குவரத்து துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது ஒப்பந்த முறையில் தனியார் பேருந்துகளை இயக்கியதால்,  அரசுக்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டி உள்ளது. போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 50 கோடி ரூபாய் இழப்பு நியாயமற்றது என சிஐடியு தெரிவித்துள்ளது.

விளம்பர திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பேருந்துகளை முறையாக பராமரிக்காமலும், புதிய பேருந்துகளை வாங்காமல் விட்டதன் விளைவாக, பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து விழா காலங்களில் போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர். இதனை சரி செய்ய புதிய பேருந்துகளை வாங்காமல் அதற்கு மாறாக போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை பண்டிகை காலங்களில் இயக்க முடிவு செய்தது விளம்பர அரசு.

அதன் படி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு ஒப்பந்த முறையில் தனியார் பேருந்துகளை இயக்கியதால், போக்குவரத்து கழகங்களுக்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கருக்கு கடிதம் எழுதி உள்ளது.

போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கினால் ஒரு கிலோமீட்டருக்கு 90 ரூபாய் செலவு செய்யப்படுவதாக போக்குவரத்துறை தவறான கணக்கை காட்டுவதாகவும், 65 ரூபாய் மட்டுமே செலவு ஆவதாகவும் சிஐடியு கூறியுள்ளது. தினம்தோறும் இரண்டு கோடி மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது, ஒரு கோடியே 75 லட்சம் மக்கள் விழாக்காலங்களில் பயணிப்பதை போக்குவரத்து கழகங்களால் கையாள முடியாது என திமுக அரசு கூறுவது முற்றிலும் தவறானது எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்,  போக்குவரத்து கழகங்களை  முறையாக மேம்படுத்தாதது, புதிய பேருந்துகளை வாங்காமல் விட்டது என போக்குவரத்து கழகங்களில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதால், போக்குவரத்து கழகமே படுபாதாளத்திற்கு சென்று விட்டதாக சிஐடியு மாநில  தலைவர் செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த பேருந்துகளாக இயக்கிய ஆளும் அரசு 50 கோடி ரூபாய் அளவிற்கு நிதியை வாரி வழங்கியுள்ளதாகவும்  கூறியுள்ளார்.

விளம்பர திமுக அரசு பொதுத்துறை நிறுவனமான  போக்குவரத்து கழகங்களை, தனியார் மயமாக்க துடித்து வருவதாக தெரிவித்துள்ள செளந்தரராஜன், தனியார் துறையே லாபகரமாக பேருந்துகளை இயக்கும்போது,  அரசு துறையால் ஏன் இயக்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் இழப்பீட்டினை அரசு வழங்கி ஈடு செய்ய வேண்டும் என்றும், போக்குவரத்து கழகங்களை சிறிது சிறிதாக விளம்பர திமுக அரசு தனியார் மயமாக்க துடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே சிஐடியுவின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day