ஆலயங்களில் நடைபெற்ற விழாக்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற விழாக்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறை அருகே உள்ள அச்சுத ராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57-ம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, கோயிலின் எதிரில் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில், மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன், கரகம், அலகு காவடிகளுடன் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. 10 நாட்களாக யாகங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆதிருத்ர மஹாயாக நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மக்கள் நலம் பெறவும், காவிரியில் தண்ணீர் பெருகவும் வேண்டி யாகத்தை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில்  46 ஆம் ஆண்டு தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில்  ஜாதி,  மத பாகுபாடு இன்றி ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மழை வேண்டி, கோவை கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மௌலவி யூனுஸ் ஃபிர்தெளசி சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் பெண்கள் உட்பட  ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டன.

Night
Day