எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை உட்பட பல்வேறு மாநகரங்களில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளின் நிலை மோசமாக இருப்பதாகவும், அவற்றை சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் இயக்கப்படும் பல மாநகரப் பேருந்துகளில் இருந்து, படிக்கட்டுகள், இருக்கைகள் உள்ளிட்டவை கழன்று விழும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பாக கடந்த வாரம் திருச்சியில் ஓடும் பேருந்தில் இருந்து இருக்கை கீழே விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழகத்தில் இயங்கும் அரசு பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளர் உத்தரவிட்டும், அதனை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் இயக்கப்படும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் இருக்கைகள், கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும், விபத்து நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே பயணிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இலவச பேருந்துகள் என்ற பெயரில் பழுதான பேருந்துகளை இயக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் பல்வேறு பேருந்துகள் மிகவும் பழைமையானது என்பதால் அவற்றை முறையாக பராமரிக்காமல் படிக்கட்டுகள் உடைந்து காணப்படுவதுடன், சேதமடைந்த சிறு சிறு பகுதிகளில் ஒட்டு போட்டு இயக்கி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, கண்துடைப்புக்காக பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்யாமல், பேருந்துகளை முறையாக பராமரித்து பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்க வழிவகை செய்யவேண்டும் என விளம்பர திமுக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில் தகரங்கள் பெயர்ந்தும், கம்பிகள் உடைந்த நிலையிலும் காணப்படுகிறது. மேலும், பயணிகள் அமரும் இருக்கைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த பேருந்துகளை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டும், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டிவருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.