எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடுகளுடன், கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியுள்ளது.
சென்னை சாந்தோம் பேராலயத்தில் தவக்காலம் தொடங்கும் நாளான இன்று சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்று ஈஸ்டர் தினத்தை வரவேற்கும் வகையில் தவக்காலத்தை தொடங்கி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அரியலூரில் சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அரியலூர் தூயலூர்து அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று நெற்றியில் திருநீறிட்டு, ஈஸ்டர் தவக்காலத்தை துவங்கினர்.
சாம்பல் புதனை முன்னிட்டு மதுரையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றன. திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, தவக்கால நோன்பினை பங்குதந்தை தொடங்கிவைத்தார். மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த புனித மரியன்னை தேவாலயத்தில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தூய சகாய அன்னை ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் 40 நாள்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. இதையொட்டி புகழ் பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிகளில் திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.