சிவராத்திரி - போதிய ஏற்பாடுகளை செய்ய உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, தேவையான ஏற்பாடுகளை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவையை சேர்ந்த சரஸ்வதி மற்றும் ரங்கசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிவராத்திரி அன்று ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாக்களில் பங்கேற்க ஏராளமான வாகனங்களில் மக்கள் வருகை தருவதால் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் தங்களால் கலந்து கொள்ள முடியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

அதனை கருத்தில்கொண்டு இருட்டு பள்ளம் சந்திப்பு, முள்ளங்காடு சோதனைச்சாவடி வழியாக சிறுவாணி சாலையில் கோவிலுக்கு செல்ல மாற்று வழிப் பாதையை ஏற்படுத்தி தர வேண்டுமென வனத்துறைக்கு மனு அளித்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செம்மேடு முதல் வெள்ளியங்கிரி சாலை வரை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தவிர வேறு எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சிவாரத்திரியை முன்னிட்டுவெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி வனத்துறைக்கு உத்தரவிட்டார். அதே சமயம் தனி வழித்தடம் அமைத்து தரக்கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

Night
Day