டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உடல்கள் சாலையில் சிதறி கிடந்த காட்சிகள் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தன. இதில், 6 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. கார் வெடிப்பு நிகழ்ந்த போது வாகனங்களின் பாகங்கள் 300 மீட்டர் வரை தூக்கி வீசப்பட்டுள்ளன.

கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடித்ததில் சாலையில் உடல்கள் சிதறிக்கிடந்த காட்சி காண்போரை குலைநடுங்க செய்தது.

வெடி விபத்தின் தாக்கம் 500 மீட்டர் வரை உணரப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தோர் மீட்கப்பட்டு டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு என்.எஸ்.ஜி மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி கார்கள் வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகமும் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரியானாவில் 350 கிலோ வெடிப்பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஜம்மு காஷ்மீரில் 2 ஆயிரத்து 900 கிலோ அளவுக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் சிக்கிய நிலையில், டெல்லியின் முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதியான செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னர் நாச வேலை காரணமா? தீவிரவாதிகளின் சதி திட்டம் ஏதேனும் இருக்கிறதா? என்கிற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.

இதனிடையே கார் வெடிப்பு அசம்பாவிதம் தொடர்பாக மூன்று சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் டெல்லி கோட்வாலி காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளிலும், வெடிபொருள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளிலும் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சந்தேகப்படும் நபரின் சிசிடிவி புகைப்படம் வெளியாகி உள்ளது. செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய i-20 காரில் சந்தேக நபர் அமர்ந்துள்ள புகைப்படத்தை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. காரில் அமர்ந்துள்ள நபர் ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என தகவல் வெளியாகி உள்ளது. டாக்டர் முகமது உமர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் எனவும் டெல்லி காவல்துறை சந்தேகமடைந்துள்ளது. 

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களை நினைத்து குடும்பத்தினர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது. அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Night
Day