எழுத்தின் அளவு: அ+ அ- அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களிடம் போதகம் செய்வது போல் நாடகமாடி பணம், நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட போலி பாதிரியாரை கேரள போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஷிபு எஸ் நாயர். இவர், மதபோதகர் எனக்கூறி குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் போதகம் செய்து வந்துள்ளார். முக்கியமாக கணவரை இழந்த ஏழை பெண்கள், நோய் பாதிக்குள்ளான பெண்களை குறிவைத்து, அவர்களின் வீடுகளுக்கு சென்று கஷ்டங்கள் தீர உதவி செய்வதாகவும், நோய்களை அண்ட விடாமல் தடுப்பதாகவும் மனமுருகி பிரார்த்தனை செய்து நாடகமாடி வந்துள்ளார்.
அவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு பணம், நகை என ஒவ்வொன்றாக நயமாக பேசி வாங்கி செல்வதை வாடிக்கையாக்கியுள்ளார். ஒரு சிலரிடம் ஆசை வார்த்தை கூறியும், ஒருசிலரை மிரட்டியும் நகை, பணத்தை வாங்கியுள்ளார். தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல பெண்களிடம் நகை, பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள், கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் கேரள காவல்நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து இருமாநில போலீசாரும் வழக்குப்பதிவு செய்து ஷிபு எஸ் நாயரை தேடி வந்த நிலையில், செவ்வாய்கிழமை அன்று கோட்டயத்தில் அவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். எந்தெந்த பகுதிகளில் என்னென்ன மோசடிகளைச் செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அப்போது கைவிலங்கோடு இருக்கும் ஷிபு எஸ் நாயரிடம், ஏழை பெண்களிடம் எப்படி போதகம் செய்து நம்ப வைப்பாய் என்று போலீசார் கேட்க, ஏசுவின் நாமத்திலே எனத் தொடங்கி மலையாளத்தில் பேசி, அதை அப்படியே நடித்து காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபோன்ற போலி ஆசாமிகளை நம்பி வீடுகளுக்கள் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்களிடம் பணம், நகை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மதத்தை வைத்து ஏழை எளிய மக்களிடம் பணம் பறிக்கும் ஷிபு எஸ் நாயர் போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.