சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்டோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் பூமியை நோக்கிய பணத்தை துவங்கியது. 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த இருவரும் இந்திய நேரப்படி நாளை அதிகாலை தரையிறங்குகின்றனர்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி, இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 8 நாட்களில் பூமி திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார்லைனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமி திரும்ப முடியவில்லை.
பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதையடுத்து இருவரையும் மீட்டுவர புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது.
இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்டோர் பூமி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களிடம் விடைபெற்ற சுனிதா வில்லியம்ஸ், வில்மோர், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்துக்கு சென்றனர். தங்களுடைய இருக்கைகளில் 4 பேரும் அமர, இந்திய நேரப்படி காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்து பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 17 மணி நேர பயணத்திற்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.27 மணிக்கு பாராசூட்கள் மூலம் வேகம் குறைக்கப்பட்டு பாதுகாப்பாக விண்கலம் புளோரிடா கடல் பகுதியில் தரையிறங்க உள்ளது.