எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை டவுன் பகுதியில் முன்னாள் காவல்துறை அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாகீர் உசேன் என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டுகாரருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மசூதியில் ஒன்றில் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாகிர் உசேனை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பியோடினர். மர்மநபர்கள் சரமாரியாக வெட்டியதில் ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் பலியான ஜாகிர் உசேனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முற்கட்ட விசாரணையில் 35 சென்ட் நிலத்திற்காக கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், ஜாகிர் உசேன் கூலிப்படைகள் மூலம் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் குற்றவியல் நீதமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதனிடையே முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொல்லப்படுவதற்கு முன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தான் கொல்லப்பட்டால் அதற்கு காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையர் செந்தில் குமார் தான் காரணம் என கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தொடர்ந்து 30 பேரிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சருக்கு இணைய தளம் மூலமாக புகார் அளித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்த பிறகும் தமிழக அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விளம்பர திமுக ஆட்சியில் தொடரும் கொலை சம்பவங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.