எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நபர், மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப்பிறகு வெளியான இந்த கள்ளச்சாராய மரணம் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் எழுந்த மரண ஓலங்கள் தமிழகத்தை மட்டும் அன்றி நாட்டையெ அதிரச் செய்தன. ஆம்.. அப்பகுதியில் எந்தவித தடையோ அச்சமோ இன்றி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 68 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இதில் கணவர்களை இழந்த மனைவியர்கள், மகன்களை இழந்த பெற்றோர் மற்றும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளின் அழுகுரல்கள் இன்னமும் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
இத்தகைய கொடூரம் அரங்கேறிய சில நாட்கள் இடைவெளியில் கள்ளக்குறிச்சி ஜூம்மா பள்ளிவாசல் அருகே மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அந்த சடலத்தை மீட்ட கள்ளக்குறிச்சி போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு என்பதும் அவர் மரத்தில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யக் கூடியவர் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில்தான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அளித்த தங்கராசுவின் உடற்கூறு ஆய்வு மற்றும் ரத்த மாதிரி சோதனை அறிக்கைகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உடற்கூராய்வு அறிக்கையின்மூலம் தங்க ராசு மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததாலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களின் எண்ணிக்கை 68 இல் இருந்து 69 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகிய இருவர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் விசாரணை மேற்கொள்ள இருவரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மார்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர். இதே வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்ட சாராய வியாபாரிகள் விஜயா மற்றும் பரமசிவம் ஆகியோரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நின்றாலும் தூரல் விடாது என்பது போல மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களைத் தவிர மேலும் பலர் உடல் உறுப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய விளம்பர திமுக அரசும் காவல் துறையும் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.