திருவள்ளூர் : பெயிண்ட் ஆலை தீ விபத்து-உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் இயங்கி வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. 

காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் இரு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் அவ்வழியாக மற்றொரு தொழிற்சாலைக்‍கு சென்று கொண்டிருந்த நபர் மீது இரும்பு மேற்கூரை விழுந்ததில் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீ விபத்தில் படுகாயமடைந்த ஷோபனா என்ற பெண்ணுக்‍கு தீவிர அளிக்‍கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரியவந்துள்ளது. இதனிடையே இன்று தொழிற்சாலையில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்‍கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், தொழிற்சாலையின் உரிமையாளரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்குவதற்காக முழு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், தீவிபத்து குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், தொழிற்சாலையில் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கி உள்ளார்களா என சோதனை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்‍கை மேலும் உயரும் என்றும், தொழிற்சாலை விதிமீறல்கள் இருந்தால் அதன் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 



Night
Day