கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பைப் லைன் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வார்டு திமுக கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய நபரின் வீட்டை அப்பகுதி மக்கள் சூறையாடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரி, 7வது வார்டு திமுககவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் கோவிந்தன், 2வது வார்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றிலிருந்து மாற்றுப் பகுதியில் அமைந்துள்ள புதிய நீர் தேக்க தொட்டிக்கு பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த வல்லரசு என்பவர் கவுன்சிலரின் கணவரான கோவிந்தனிடம் உடனடியாக பைப் லைன் பள்ளத்தை அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர், திடீரென கோவிந்தன் மற்றும் செல்வம் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கோவிந்தன் உறவினர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும் ஆத்திரம் அடங்காத கிராம மக்கள் மற்றும் கோவிந்தனின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசுவின் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். இதனால், அக்கிராமமே போர்களம் போல் காட்சியளித்தது.