வாகனப் பதிவெண் மாற்றம்... பறந்த கொள்ளையர்கள்... பறக்கும் படை எங்கே...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அருகே திரைப்பட பாணியில் நகை கடையில் கொள்ளையடித்த வடமாநில கும்பல், கார் பதிவெண்ணை மாற்றி மாற்றி போலீசாருக்கு தண்ணி காட்டி வருகிறது. மேலும், இந்த கும்பல்தான், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பை தற்போது காணலாம்...

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ளது முத்தா புதுப்பேட்டை. இந்த பகுதியில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். 

இவரது நகை கடைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் நகை வாங்குவது போல் வந்த 4 பேர் கொண்ட கும்பல்,  துப்பாக்கி முனையில் உரிமையாளர் பிரகாஷ் மற்றும் கடையில் இருந்த ஊழியர்களின், கை கால்களை கட்டி போட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச்சென்றது.

இதனால் பதறிப்போன கடை உரிமையாளர் பிரகாஷ், உடனே காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் அய்மன் ஜமால் மற்றும் ஆவடி காவல் உதவி ஆணையர், நகைக்கடையை ஆய்வுசெய்து, கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் வாகன எண்ணை கண்டறிந்த போலீசார், கொள்ளையர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, தனிப்படை போலீசார் தங்களை நெருங்கியதை தெரிந்து கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், திரைப்பட பாணியில் கார் பதிவு எண்ணை மாற்றி மாற்றி திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனிப்படை போலீசார் விசாரணையில் கொள்ளை கும்பல் இன்னும் திருவள்ளூர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன், நகைக் கடையில் கொள்ளையடித்த இந்த கும்பல்தான், 10 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்திவரும் நிலையில், இந்த கொள்ளையர்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் எப்படி மாயமானர்கள் என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்துள்ளது. 

Night
Day