விடுதி கழிவறையில் சடலமாக கிடந்த மாணவன்... மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய விளக்கம் அளிக்க உறவினர்கள் கோரிக்கை.

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர், கழிப்பறையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது மகனின் உடலில் பல்வேறு வெட்டு காயங்கள் இருந்ததாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள பர்கிட் மாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விக்னேஷ், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், மாணவர் விக்னேஷ் கடந்த 13ஆம் தேதி அங்குள்ள விடுதி கழிவறையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவரின் பெற்றோர் அவரது உடலை உடற்கூராய்வு செய்ய விடாமல், இறப்பு குறித்து முழு விசாரணை நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாணவர் விக்னேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மூடி மறைப்பதாகவும் கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவனின் இறப்பு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. வலிப்பு அல்லது எறும்பு கடித்து மாணவன் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலையில், அவர்களின் விளக்கத்தை உறவினர்கள் ஏற்க மறுத்தனர். அதே சமயம் உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து, சொந்த கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனது மகன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும், உயிரிழப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவனின் தந்தை செல்வம் வேதனையுடன் கூறினார்.

மாணவன் இறப்பில் நிலவும் மர்மம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்கப் போவதில்லை எனவும் உறவினர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

எறும்பு கடித்து மாணவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதால், மாணவன் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

Night
Day