சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆவணப்படம்... தனுஷின் அடுத்தகட்ட நகர்வு என்ன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் குறித்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் தனுஷ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தனுஷின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேரளாவில் பிறந்து மலையாள மொழி வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமாகி இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இந்நிலையில், நயன்தாரா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி Beyond The Fairy Tale என்ற தலைப்பில் நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்த திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு மணி 22 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா முதல் முறையாக மலையாள படத்தில் அறிமுகமானது, தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானது, அவரது தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனது, கஜினி படத்தில் அவரது உடலமைப்பு பற்றி எழுந்த கிண்டல்கள், சீதையாக நடித்த பிறகு சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்தது, பின்னர் மீண்டு வந்து தொடர்ந்து படங்களில் நடித்தது, நானும் ரவுடிதான் படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் உடனான காதல், திருமண ஏற்பாடுகள், இரு குழந்தைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின் போது, நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இடையே ஏற்பட்ட காதலின் காரணமாக, இருவரும் சரிவர படத்தில் கவனம் செலுத்தாததாலும் படத்தின் தயாரிப்பு செலவு ரூபாய் 16 கோடி வரை சென்றதால், தயாரிப்பாளர் தனுஷிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் நெட்பிளிக்ஸ் நிறுவனம், நயன்தாரா-விக்னேஷ் சிவனின் காதல் தொடங்கிய இடமான நானும் ரௌடிதான் திரைப்படத்தின் பாடல் மற்றும் படக்காட்சிகளை திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்த விரும்பியது.

இதற்கான அனுமதியை விக்னேஷ் சிவன் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் முறையாக கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவினால் ஏற்பட்ட நஷ்டத்தினால் மிகுந்த அதிருப்தியில் இருந்த நடிகர் தனுஷ்,  நானும் ரௌடிதான் படத்தின் பாடலை பயன்படுத்தும் உரிமையை வழங்க மறுத்து விட்டார்.

திருமண ஆவணப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானபோது, அதில் நானும் ரௌடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற்றிருந்ததால், நடிகர் தனுஷ் தனது வழக்கறிஞர் மூலம் 10 கோடி ரூபாய் கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 

இந்த சூழலில் நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்து தற்போது வெளியாகியுள்ள ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் இடம்பெற்றுளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், நடிகர் தனுஷின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவே விழி பிதுங்கி நிற்கிறது. 

Night
Day