எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் இன்ஜினியர் ஒருவர் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, ஜப்பானியர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை ஜப்பானிய மொழியில் கற்றுத் தந்து அசத்தி வருகிறார். ஜப்பானில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர், அந்நாட்டு அரசாங்கம் தொழில் தொடங்க நிதி உதவி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி கருப்பசாமி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியிலேயே கல்வி பயின்று, பொறியியல் படிப்பை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முடித்துள்ளார். இந்நிலையில், சுயமாக தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த எனர்ஜி ஆடிட்டிங் என்ற நிறுவனத்தை துவங்கி நடத்தி வந்துள்ளார் விஜயலட்சுமி கருப்பசாமி.
அதனை தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐடி துறையில் ஆன்லைன் மூலம் பல்வேறு பயிற்சிகளையும் கற்ற நிலையில், இவரது நிறுவனத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் பயிற்சி பெற தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக ஜப்பானில் தொழில் துவங்குவதற்காக தென்னிந்தியாவில் முதல் முதலாக ஸ்டார்ட் அப் விசா வழங்கி விஜயலட்சுமி கருப்பசாமியை ஜப்பானுக்கு அழைத்த அந்நாட்டு அரசாங்கம். அதன் படி, ஜப்பானுக்கு சென்ற அவர் அங்கு பாக்ஸ் அகாடமி என்ற ஏஐ தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஸ்வீடன் பல்கேரியா, பெல்ஜியம் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் மூலம் ஏஐ தொழில் நுட்பத்தை ஜப்பானிய மொழியில் அந்நாட்டவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார். இவரது திறமையை பார்த்து ஜப்பான் அரசாங்கம் பிசினஸ் மேனேஜர் விசா வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.
ஜப்பானில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், பெண்கள் ஜப்பான் வந்து தொழில் துவங்கலாம் என்றும் கூறிய விஜயலட்சுமி, இதற்காக ஜப்பான் அரசாங்கம் நிதி உதவி அளிப்பதாகவும் தெரிவித்தார். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதால், ஜப்பானியர்கள் தங்களிடம் அந்த தொழில் நுட்பத்தை கற்று வருவதாகவும் கூறினார்.
விவசாய குடும்பத்தில் பிறந்து ஜப்பான் வரை சென்று, அங்கு வசிப்பவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் பெண் இன்ஜினியர் விஜயலட்சுமியின் சாதனை அளப்பரியது என்று சொன்னால் அது மிகையாகாது.