எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரையில் ஈடுபட்டார். ஜி.கே.வாசன் பேச துவங்கும் முன்பு பாஜக தொண்டர் வருங்கால எம்எல்ஏ என கோஷமிட்டதால் நாக்கை துருத்தி வருங்கால எம்பி என கூறுங்கள் என கடிந்து கொண்டார். தொடர்ந்து பேசுகையில், நல்லரசாக செயல்பட்டு கொண்டிருக்கும் முதல்வர் எனக் கூறிவிட்டு உடனடியாக பிரதமர் என ஜி.கே.வாசன் மாற்றி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், மத்திய அரசை எதிர்க்கட்சியாக பார்க்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தொகுதி பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்றும் மத்திய அரசுடன் ஒத்தக்கருத்துள்ளவர்களை ஆதரிக்கவேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடியில் மழை வெள்ள காலங்களில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு முறையாக கையாலவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி தெலுங்கில் பேசி அப்பகுதியில் வாக்கு சேகரித்தார். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்துள்ள ஏனாம் பிராந்தியத்தில் வைத்திலிங்கம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அப்பகுதி மக்களின் மொழியான தெலுங்கில் பேசி தனக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மத்திய அரசு வழங்கிய 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கணக்கு சொல்வாரா என, வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏசி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது எனவும், இதனை தற்போது சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான், காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக கூறினார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அரசன் செருப்பு மாலை அணிந்து கொண்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள செருப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு உளுந்தூர்பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். காவல்துறையினருக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை அளிக்க அரசுக்கு வலியுறுத்துதல், விவசாயிகளுக்கு மாதம் 2000 ரூபாய் மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தருதல் உள்ளிட்ட கவர்ச்சி வாக்குறுதிகளை அள்ளிவீசினார்.