தமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் புதுமண தம்பதியினர் தலப்பொங்கலை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையொட்டி நெல்லையில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி வண்ண கோலமிட்டு மக்கள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.  பாளையங்கோட்டையில் புதுமண தம்பதியினர் தலப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். 


தை முதல் நாளில்  உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தூத்துக்குடி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் காலை முதலே புத்தாடை அணிந்து பாரம்பரிய முறைப்படி பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு முன்பாக வண்ண கோலமிட்டு பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை சூரிய பகவானுக்கு படைத்து பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு உற்சாகத்துடன் வழிபட்டனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவலர்கள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். முத்தாரம்மன் கோயில் திடலில் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில், காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து தங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். அதை தொடர்ந்து, கயிறு இழுத்தல், மியூசிக் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. படூர் பகுதியில் இதற்காக பாரம்பரிய முறைப்படி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 75 கிலோ எடையிலான இளவட்ட கல்லை பெண்கள் தூக்கி அசத்தினர். அதேபோல், சிறுவர்களுக்கு இட்லி சாப்பிடும் போட்டி, உறியடி போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன. 

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கதிர்காமம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வண்ண வண்ண கோலமிட்டு அசத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி பாரம்பரிய முறைப்படி வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து மக்கள், புதுப்பானையில் பச்சரிசி, பால், வெல்லம் இட்டு பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கிறிஸ்தவ மக்கள் ஒன்று கூடி 9 பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டார்குளத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, ஆலயத்தின் முன்பு கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து 9 பானைகளில் மெழுகுவர்த்தி கொழுத்தி பொங்கலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கூட்டு குடும்பமாய் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. அவர்கள் பொங்கல் வைத்து கரும்பு உள்ளிட்டவற்றை படைத்து மகிழ்ந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் மீனவர்கள் சார்பில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி செயிண்ட் தாமஸ் ஆலயத்தில் மீனவர்கள் சார்பில் பானையில் பொங்கல் வைத்து வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சமத்துவ பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெருமுளை கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100க்கும்  மேற்பட்டவர்கள் தங்கள் வீட்டின் முன்பு பல்வேறு வண்ணப் பொடிகளை கொண்டு கோலமிட்டு பானைகளில் மஞ்சள் கொத்து கட்டி புத்தாடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, இளைஞர்கள் தாரை தப்பட்டை இசை வாத்தியங்களை வாசித்து அசத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் வீடுகளில் வண்ண கோலமிட்டு பானையில் மஞ்சள், இஞ்சி கொத்துகளை கட்டி பச்சரிசி, வெள்ளம் ஆகியவற்றை இட்டு பொங்கலிட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். 

கோவை பீளமேட்டில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹட்கோ காலனியில் தோரணம் கட்டி அலங்காரம் செய்தும் வண்ண கோலமிட்டும், மக்கள் புத்தாடை அணிந்து சாதி, மதம் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபாடு செய்தனர்.

சேலத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி பாரம்பரிய முறைப்படி வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து மக்கள் பானையில் பச்சரிசி, பால், வெல்லம் இட்டு பொங்கல் வைத்து குலவையிட்டு வழிபட்டனர். 

தூத்துக்குடி சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் எனவும், உழவர்கள் வாழ்வு செழிக்க வலியுறுத்தியும் கிறிஸ்துவர்கள் வண்ணக் கோலமிட்டு பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெய்வழிச்சாலை கிராமத்தில் 80 ஆண்டுகளை கடந்து, மக்கள் ஒன்று திரண்டு பொன்னுரங்க தேவாலயத்தில் அடுப்பு மூட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில்  ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ரவி பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். இருவரும் மண் பானையில் பொங்கல் வைத்தனர். அப்போது குழந்தைகள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.  பொங்கல் விழாவில் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பணியாளர்களின் குழந்தைகளுக்கு இசை நாற்காலி போன்ற விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. 

சென்னை விருகம்பாக்கத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வசிக்கும் டாயிஷா குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா கேலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், ஐஏஎஸ் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் பறையடி, பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட  பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கோலப்போட்டி, உரியடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னை வில்லிவாக்கம் ஜி.கே.எம் காலனியில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாதிரியார் அருட்திரு அலெக்சாண்டர் தலைமையில் கரும்பு, தென்னங்குருத்து தோரணங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு புதுப் பானை வைத்து பொங்கல் வைக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தென்காசி மாவட்ட காவல் துறையினர் சார்பில் குற்றாலம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், புதுப்பானையில் பொங்கல் இட்டு வழிபாடு, மற்றும் கோ பூஜை, உரியடி போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. மேலும், அதிகாரிகள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருடன் ஆடிப்பாடி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பொங்கல் விழாவையொட்டி கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்டவை நடைபெற்றன. போலீசார் மற்றும் அவர்களது குடும்பதினர் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்டு, காவல் நிலையம் முன் புதுப்பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து மியூசிக்கல் சேர், கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிசுகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் செயல்பட்டு வரும் இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைக்கும் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரியில் பொங்கல் விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் கயிறு இழுத்தல், உரியடி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உறியடி போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் பற்கேற்றனர். மேலும், படுகர் இன மக்களுடன் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நடனமாடி அசத்தினர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொறுப்பு டிஎஸ்பி ராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில் புதுப்பானையில் பொங்கல் இட்டு வழிபட்டனர். பின்னர், ஆட்டம் பாட்டத்துடன் காவலர்கள் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் காவல்துறையினர் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும், பானை உடைத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் போன்ற போட்டிகள் மற்றும் ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரம்பரிய உடையணிந்து காவலர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், கபடி, வாலிபால், வழுக்கு மரம் ஏறுதல், இசை நாற்காலி, கோலப்போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஒன்றியத்துக்குட்பட்ட டி பெருமாபாளையம் ஊராட்சியில் பொங்கல் வைத்தும், தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு, பொங்கல் பரிசு வழங்கி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதேபோல், வீராணத்தில், காவல்துறையினருடன் இணைந்து ஊராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

திருப்பூரில் மாநகர காவலர் குடியிருப்பில் மாநகர காவல் ஆணையர்.பிரவீன் குமார் அபினபு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் காவலர்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள், கோல போட்டிகள் நடைபெற்றன. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள புனித தெரசாள் குழந்தை இயேசு தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தேவாலய வளாகத்தில் வண்ண கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு இயேசுபிரானிடம் வைத்து சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. மேலும், இசை நாற்காலி விளையாட்டும் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை அருகே மறையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஜாதி மத பேதமின்றி சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் புதுப்பானையில் பொங்கலிட்டு  மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர். தொடர்ந்து, மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றும் பாடல்களுக்கு நடனமாடியும் மகிழ்ந்தனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் கல்லூரி நிர்வாகம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுப்பானையில் பொங்கல் வைத்து, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், காந்தாரா படத்தில் வருவது போன்று மாணவர்கள் ஒப்பனை செய்து, அந்த பாடலுக்கு ஏற்ப நடனமாடியது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

திருப்பத்தூரில் அமைந்துள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். புதுப்பானையில் பொங்கல் வைத்து, அது பொங்கிவரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என முழங்கி உற்சாகமடைந்தனர். இந்நிகழ்ச்சில் கல்லூரி முதல்வர், செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். 

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பொங்கல் கலைவிழா, கிழக்கு கடற்கரை சாலை சின்னகோட்டகுப்பம் பகுதியில் உள்ள திடலில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். உறியடித்தல், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை புதுச்சேரிக்கு வருகை தந்த வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும், மகளிரின் சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் தயாரித்த கைவினைப்பொருட்கள், பாராம்பரிய உணவு வகைகள் உள்ளிட்டவை விற்பனைக்‍காக விழாவில் தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள 120 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இருதய ஆண்டவர் ஆலயத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்‍கள் கலந்துகொண்டு, ஆலய வளாகத்தில் வண்ண கோல‌மிட்டு, பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். உறியடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. புதுச்சேரிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

விவசாய பெருமக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, காரைக்காலில் புகழ் பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் முதன் முறையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காரைக்‍கால் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கிராம விவசாய பெருமக்கள் ஏராளமானோர் தேவாலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து பிரார்த்தனை நடைபெற்ற பின்னர், அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன.

காரைக்காலை அடுத்த பூவம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கூட்டாஞ்சோறாக பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து நாட்டுப்புற விழிப்புணர்வு பாடலுக்கு மாணவ, மாணவியர் நடனமாடி அசத்தினர். 

தைத்திருநாளையொட்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மைதானத்தில் வண்ணக்‍கோலமிட்டு, செங்கரும்பு கட்டுகள், மாவிலைத் தோரணங்களுக்‍கிடையே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 10-க்‍கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கி வரும்போது, பொங்கலோ பொங்கல் என முழங்கினர். விழாவிற்கு வருகை புரிந்த விவசாய உழவர் பெருமக்களுக்‍கு, பள்ளியின் இயக்குநர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய் ஸ்ரீராம் தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்து உற்சாகமுடன் கொண்டாடினர். கயிறு இழுத்தல், உறியடித்தல், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள், வள்ளி கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் காவலர் குடியிருப்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கரும்புகள் வைத்து, தோரணங்கள் கட்டி பொங்கல் வைத்து படையலிட்டு காவல் துறையினர் குடும்பத்துடன் கொண்டாடினர். மேலும், கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Night
Day