எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய CRPF பாதுகாப்புடன் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகனின் வீட்டில் அதிகாரிகள் குவிந்துள்ளதால், வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்துக்கு வர வாய்ப்புள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தலைமை செயலகம் பரபரப்பாக காணப்படுகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது இல்லத்தில் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரமாக அவரது வீட்டின் வாயிலில் காத்திருக்கின்றனர். மேலும்
கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டில் இருந்து 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திமுக அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான காட்பாடி அடுத்துள்ள பள்ளிகுப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாநகர விவசாய அணி அமைப்பாளராக இருந்துவரும் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 6 பேர் கொண்ட் அதிகாரிகள் குழு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, வருமான வரித்துறை நடத்திய சோதனையில், பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் இருந்து 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காட்பாடியில் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிந்துள்ள நிலையில், சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் அமைச்சர் துரைமுருகன், திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வர உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைமை செயலக வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.