மாதவிடாய் காரணமாக பள்ளி மாணவியை வெளியே அமர வைத்த பள்ளி நிர்வாகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் பூப்பெய்தி 5 நாட்களே ஆன பள்ளி மாணவியை வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த செங்குட்டைபாளையத்தில் இயங்கி வருகிறது சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 5-ம் தேதி பூப்பெய்தியுள்ளார். இந்தநிலையில், முழு ஆண்டு தேர்வு நடப்பதால் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குத் தேர்வெழுதச் சென்றுள்ளார்.  ஆனால் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்த பள்ளி நிர்வாகம், 7 மற்றும் 9-ம் தேதி நடைபெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளை படியில் தனியாக அமர வைத்து எழுத வைத்துள்ளது. 

இதுகுறித்து மாணவியின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் கேட்கும்போது, இங்கு அப்படி தான் நடக்கும் என்றும் உங்கள் பிள்ளையை வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் எனவும் அலட்சியமாக கூறி உள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் இணைந்து பள்ளி நிர்வாகம் மீதும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

Night
Day