எழுத்தின் அளவு: அ+ அ- அ
விசாரணைக்கு அழைத்துச் சென்ற தங்களின் சகோதரரை விடுவிக்கக் கோரி காவல் நிலையம் முன்பு சகோதரிகள் விஷம் குடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் அய்யா தினேஷ். இவரை விசாரணைக்காக நடுக்காவேரி போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தங்களது சகோதரரை விடுவிக்கக் கோரி அவரது சகோதரிகளான 29 வயதான கீர்த்திகா மற்றும் 33 வயதான மேனகா இருவரும் காவல்நிலையம் முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக அவர்களை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு சகோரதர் தினேஷை விடுவிக்க கோரி விஷமருந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சகோதரிகள் கீர்த்திகா மற்றும் மேனகா காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் உடலை வாங்காமல் இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவரது சகோதரர் தினேஷ் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதால் 3 டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விசாரணைக்கு அழைத்துச் சென்ற சகோதரனை விடுவிக்கக் கோரி விஷம் குடித்த சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய ஆய்வாளர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ராஜராம் உத்தரவிட்டுள்ளார்.