எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் 22 மாதங்களுக்குப் பிறகு திரெளபதி அம்மன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு சமூகத்தினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக 2023-ம் ஆண்டு அக்கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் கோயிலை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென ஒரு சமூகத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து 22 மாதங்களுக்கு பிறகு இன்று கோயில் நடை திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது அங்கு வந்த ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள், பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கூடாது என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில் இன்று நல்ல நாள் இல்லை எனக் கூறியும், கோயில் ஏனோ, தானோ என்று திறக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியும் மற்றொரு தரப்பினர் சாமி தரிசனம் செய்யவில்லை. இதனால் பட்டியலின மக்களின் வழிபாடு முடிந்தபின் கோயில் நடை சாத்தப்பட்டது.